ஈரோடு ஜூன் 8: முழு முடக்க நிலையில் குழந்தை திருமணங்கள் நடப்பது அதிகரித்துள்ளதை தடுப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இத்துறை செயலாளர் ஷம்புகல்லோலிகர், சமூக நல ஆணையர் ஆபிரஹாம், சமூக பாதுகாப்பு துறை ஆணையர் லால்வானா, 32 மாவட்ட சமூக நல அலுவலர்கள், சைல்டு லைன் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு குறைவாக உள்ள நிலையில் திருமணம் செய்து வைக்கும், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். இக்குற்றம் புரிந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், ஊக்குவிப்பவர்கள், கலந்து கொள்பவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மூலம், குழந்தை திருமணங்கள் நடக்காமல் தடுக்க தொடர் கண்காணிப்பிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மீறி நடப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன், சைல்டு லைன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.குழந்தை திருமணங்கள், குழந்தைகள், பெண்கள் தொடர்பான புகார்கள், பாலியல் தொல்லைகள் குறித்து சைல்டு லைன் எண் 1098க்கு தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

நிருபர்.
ஈரோடு டுடே