ஈரோடு சூன் 24: ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் குழந்தை திருமணங்களை தடுக்க 34 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சுதாகர் கூறினார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறை சார்பில், காக்கும் கரங்கள் என்ற பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ்.பி., சசி மோகன் வரவேற்றார். கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் ஐ.ஜி. சுதாகர் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் தினமும் வழக்குகள் பதிவாகி வருவது கவலையளிக்கிறது. இதே போல பாலியல் குற்றங்களும் அதிகமாக நடந்து வருகின்றது. நடப்பாண்டில் மட்டும் இதுவரை 14 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க காக்கும் கரங்கள் என்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 34 குழுக்கள் அமைக்கப்பட்டு குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 128 இடங்களை கண்காணிக்க உள்ளனர். இக்குழுவில் ஏ.டி.எஸ்.பி.,கனகேஸ்வரி, மகளிர் போலீசார், சைல்டுலைன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமல்லாது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் முற்றிலும் இல்லை என்ற நிலையை உருவாக்கப்படும். சேலத்தில் எஸ்.எஸ்.ஐ., தாக்கியதில் வியாபாரி முருகேசன் இறந்த விவகாரத்தில் சம்பவம் நடந்த உடனேயே எஸ்.எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களை காப்பதற்காகத்தான் காவல்துறை உள்ளதே தவிர அடிப்பதற்காக அல்ல. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாருக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்பட்டு வருகின்றது.இவ்வாறு கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே