ஈரோடு சூன் 19:கீழ்பவானி பாசனத்திற்கு ஆகஸ்ட் 1ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கீழ்பவானி பாசனத்தில் நெல் சாகுபடிக்கு, ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பு பாசன பருவத்தில் தொடக்கத்திலேயே அணையின் முழு கொள்ளளவான 32.8 டி.எம்.சி,யில், மூன்றில் இரண்டு பங்கு நீர் இருப்பில் உள்ளது.நீலகிரி மின் அணைகள் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் பில்லூர் அணையில் இருந்து பவானிசாகருக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1 டி.எம்.சி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை தொடர்ந்தால் விரைவில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் இருப்பையும், பாசன பகுதியில் நிலவும் வறட்சியையும் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நீர் திறக்க வேண்டியது அவசியம் ஆகிறது.இதற்காக ஆண்டுதோறும் செய்ய வேண்டிய மராமத்து பணிகளை பொதுப்பணித்துறை விரைந்து முடிக்க வேண்டும். நீர் திறப்பு அறிவிப்பை முன்கூட்டியே அரசு அறிவித்தால் இடுபொருட்கள் தயார் செய்வதற்கும், நிலத்தை தயார் செய்வதற்கும் வசதியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே