ஈரோடு ஜூன் 10: ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருவாச்சி காய்ச்சல் கண்டறியும் முகாம் உட்பட பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று பரவல் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.பின், கொரானா தடுப்பு பணிகள் குறித்து ஈரோட்டில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது,மாநகரம், நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் தொற்று அதிகம் பரவுகிறது. நகரத்தை ஒட்டிய கிராம மக்கள், அனைத்து தேவைக்கும் நகருக்கு வந்து செல்வதால், தொற்று ஏற்படுகிறது. அதேநேரம், பஸ் போக்குவரத்து, பிற வாகன போக்குவரத்து இல்லாமல் உள்ள பகுதியில் பரவல் குறைவாக உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 பஞ்சாயத்துக்களில் மூன்று பஞ்சாயத்துக்களில் முழுமையாக கொரானா பரவல் இல்லை. கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை எடுத்ததும், முடிவு தெரியும் வரை தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், என வலியுறுத்துகிறோம்.இப்பரிசோதனை முடிவுகளை, 24 மணி நேரத்துக்குள் தருவதால், பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும், 100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர், அரசு ஊழியர்கள் என நியமித்து தொற்று பரவலை கண்டறிவதால் உடனடியாக சிகிச்சை வழங்கி, விரைவாக குணப்படுத்த வசதியாகிறது.கொரானா சிகிச்சை பகுதியில் வெளி நபர்கள், உறவினர்கள், சம்மந்தம் இல்லாதவர்களை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து துறையினர் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வதுடன், தொற்று ஏற்பட்டவர்களுக்கு விரைவான சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.தற்போதுள்ள மருத்துவ வசதி, படுக்கைகளின் எண்ணிக்கை போன்றவை தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, 2,000க்கும் மேற்பட்ட படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆக்சிஜன் இணைப்புடனான படுக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் கொரோனா பரவலில் எந்த சூழலையும் எதிர் கொள்ள முடியும், என்றார்.ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் கே.கோபால், ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், திருமகன் ஈவெரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்.
ஈரோடு டுடே