ஈரோடு சூன் 17: பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கவச உடை அறிந்து சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக உள்ளது. இங்கு அமைச்சர் சு.முத்துசாமி ஏற்பாட்டின்படி, தனியார் பங்களிப்புடன் கூடுதலாக 600 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. அதற்கான கட்டுமான பணி நடக்கிறது.ஈரோடு மாவட்ட புதிய கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று அவ்விடங்களை ஆய்வு செய்தார். கொரோனா சளி மாதிரி பரிசோதனை மையத்துக்கு சென்ற கலெக்டர், தினசரி பரிசோதனை விவரங்களை கேட்டறிந்தார்.கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதையும் அவர் பார்வையிட்டு உறுதி செய்தார். கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ள பகுதிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கவச உடை அணிந்து சென்றார். நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அங்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துகள், உணவு போன்றவை திருப்தியாக உள்ளதா என கேட்டறிந்து, ஆறுதல் தெரிவித்தார்.மருத்துவக்கல்லூரி முதல்வர் மணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே