ஈரோடு சூன் 23: ஈரோட்டில் சட்ட விரோதமாக வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட, 4 ஆயிரத்து 266 மதுபாட்டில்களை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சாக்கடையில் ஊற்றி அழித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தொற்று அதிகமுள்ள ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை பயன்படுத்தி சிலர் ரயில்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மூலம் கர்நாடக மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட வெளி மாநில மதுபாட்டில்கள் 4 ஆயிரத்து 266 மதுபாட்டில்களை அழிக்க முடிவு செய்தனர்.இதன்படி உதவி கலால் அலுவலர் குமரேசன் தலைமையில் போலீஸ் ஆய்வாளர் ரமேஷ் உட்டோர் சேர்ந்து, 1,100 லிட்டர் மதுவை சாக்கடையில் ஊற்றி அழித்தனர். ஈரோடு மதுவிலக்கிற்கு உட்பட்ட 49 வழக்குகளில் 52 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதுபோன்று கடத்தல், பதுக்கல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் மதுபான பாட்டில்களின் மூடிகள், பெட்டிகள் பிரிக்கப்படாமல் இருந்தாலும், அதில் விஷம் கலந்து இருக்கலாம். அல்லது குடிப்பதற்கு உகந்ததாக இருக்கும் என்பதால் அவை மறு பயன்பாட்டுக்கு வழங்காமல் அழிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே