ஈரோடு சூன் 18: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்பட வேண்டிய விளைபொருள் பட்டியலில் மக்காச்சோளத்தை சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம் ஆகியவை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றது. அறுவடைக்கு பின் அந்தியூர், பூதப்பாடி, சத்தியமங்கலம், தாளவாடி, புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை விற்பனை செய்து விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க, அரசு மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம் ஆகியவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படும் விளைபொருள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால் வேறுவழியின்றி விவசாயிகள் வெளியிடங்களில் ஆதார விலையை விட மிக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக இடைத்தரர்களின் ஆதிக்கத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே விவசாயிகளுக்கு எதிராக உள்ள முந்தைய அதிமுக அரசின் உத்தரவை ரத்து செய்துவிட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மக்காச்சோளம், ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்ய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் கூறியதாவது, முந்தைய அ.தி.மு.க, அரசு தங்களது சுய நலத்திற்காக விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்கப்பட வேண்டிய விளைபொருட்கள் பட்டியலில் இருந்து மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம் ஆகியவற்றை நீக்கம் செய்துவிட்டது.இதனால் அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலையை விட குறைந்த விலைக்கு வெளியிடங்களில் விற்பனை செய்து வருகின்றோம். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்கள் இருப்பு வைக்க ஏராளமான குடோன்கள் உள்ளது. விற்பனை கூடங்களில் ஏலமுறையில் கூடுதல் விலை கிடைக்கும். பணமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். இப்படி பல்வேறு நன்மைகள் உள்ளது. எனவே விளைபொருள் விற்பனை பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரை விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு பொன்னையன் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே