பெருந்துறை மே 30: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் ஒப்பந்த முறையில் பணி செய்வோரை, பணி நிரந்தரம் செய்ய கோரி, முதல்வர் ஸ்டாலினிடம், ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) மாவட்ட தலைவர் சின்னசாமி மனு வழங்கினார்.அவர்களது மனுவில் கூறியது;பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கிரிஸ்டல், பைவ் ஸ்டார் என்ற தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம், 300க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர். ‘அவுட்சோர்சிங்’ முறையில் இவர்கள், ஓராண்டு முதல், 15 ஆண்டாக பணி செய்கின்றனர். ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர்கள், இரு பால் மருத்துவ உதவியாளர்கள், துாய்மை பணியாளர்கள், பாதுகாவல் பணியாளர், தோட்ட பணியாளர் என பல பணி செய்கின்றனர். தவிர, டிப்ளமோ படித்த பணியாளர்கள், 30 பேர் இரண்டு ஆண்டு முதல் 15 ஆண்டாக மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் பணி செய்கின்றனர். இவர்கள், 12,000 ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர். அரசு நிர்யணித்த குறைந்த பட்ச ஊதியத்தைவிட குறைவாக, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.இவர்களின் ஒப்பந்ததாரர்கள், முழு சம்பளம் தராமல், சட்ட விரோதமாக பிடித்தம் செய்கின்றனர். பி.எப்., இ.எஸ்.ஐ.,க்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய தொகையை, தொழிலாளர்களிடமே பிடித்தம் செய்கின்றனர். பிடித்தம் செய்த தொகை அரசுக்கு செலுத்தவில்லை.இத்தொழிலாளர்களை நிரந்தரம் செய்து, அரசு நிர்ணயித்த சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கும் ஆளாகி உள்ளதால், இவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள், ஊக்கத்தொகை வழங்க வேண்டும், என கோரியுள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே