ஈரோடு செப் 20:

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம் ஓடையில் இன்று மாஸ் கிளினிக் நடைபெற்றது. இந்தப் பணியை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-மழைக்காலம் தொடங்க இருப்பதால் அனைத்து இடங்களிலும் முதல்வர் உத்தரவுப்படி மாஸ் கிளினிக்  செய்யப்பட உள்ளது. அதன்படி இன்று காசிபாளையம் ஓடை சுத்தப்படுத்தப்பட்டு தூர்வார பாடுப்படுகிறது.  ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக 85 இடங்கள் பரிசீலனையில் உள்ளது. இன்று மாலை இது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.  சோலார், அரச்சலூர், கனிராவுத்தர் குளம் போன்ற பகுதிகளில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக வீட்டுவசதித் துறை மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டிட உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பெரிய அளவு குறைபாடுகள் எதுவும் இல்லை. சிறிய சிறிய குறைபாடுகள் உள்ளன. கடந்த கால ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்கு மத்திய மாநில அரசுகள் நிதி உதவியுடனும், பயனாளிகள் தங்கள் தரப்பில் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும். சில பயனாளிகளால் பணம் கட்ட முடியவில்லை. அவர்களுக்கு சுலபமுறையில் வங்கிகளில் கடனுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுவசதித் துறையில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சித்தோடு அருகே 85 மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது அந்த இடம் கரடு முரடாக இருப்பதாக கூறியுள்ளனர்.

அங்கு வெடி வைத்தால் அருகில் உள்ள மற்ற வீடுகள் பாதிக்கப்படும். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று இடத்தில் அவர்கள் அனுமதியுடன் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஓடை புறம்போக்கில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க இயலாது. ஆனால் அவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உட்பட பலர் உடனிருந்தனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/