ஈரோடு மே 31: ஈரோட்டில் உரிய காரணம் இல்லாமல் வாகனங்களில் திரிந்தவர்களை பிடித்த போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அவர்களை கொரானா பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.தமிழகத்தில் மிக அதிகமாக கொரானா பரவல், சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ளது. இதனால் இங்கு இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கூடுதலாக நியமித்து, கொரானா தடுப்பு பணிகளை மட்டும் கண்காணிக்கின்றனர்.இதற்கிடையில் நேற்று காரணம் இல்லாமல், ஊர் சுற்றியவர்களில் பெண்களுக்கு அபராதம் விதித்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர். முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி விடாமல் செயல்பட்டவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.அதேநேரம், இ–பாஸ், இ–பதிவு, உரிய காரணம் இல்லாமல் பைக் மற்றும் கார்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீஸ், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பிடித்தனர். அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன், அவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சென்று, கொரானா பரிசோதனை செய்தனர். கொரானா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தால், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும், என்றும், நெகட்டிவ் என முடிவு வந்தால், அந்த சான்றுடன் வந்து வாகனத்தை பெற்றுச் செல்ல வலியுறுத்தினர்.நேற்று மட்டும், 50க்கும் மேற்பட்டோர் கொரானா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

நிருபர்.
ஈரோடு டுடே