ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டமஞ்சள் ஏலம் நாளை மறுநாள் தொடக்கம் ஈரோடு சூன் 21: கொரோனா ஊரங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மஞ்சள் ஏலம் நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்வதற்கான ஏல மையங்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஈரோட்டில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் மஞ்சள் ஏலம் நடைபெற்று வந்தது. ஆனால் வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி மஞ்சள் ஏலங்கள் கடந்த மே 10ம் தேதியுடன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தெலுங்கானா, மகாராஸ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மஞ்சள் ஏலம் தொடங்கி உள்ளதால் ஈரோட்டிலும் மஞ்சள் ஏலத்தில் கலந்து கொள்ள வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். நாளை மறுநாள் 23ம் தேதி முதல் ஈரோட்டில் மஞ்சள் ஏலத்தில் கலந்து கொள்வதென வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது மெல்ல குறைந்து வருகின்றது. இந்திய அளவில் தெலங்கானா, மகாராஸ்டிரா மாநிலங்களில் மஞ்சள் வர்த்தகம் நடந்து வருகிறது. தமிழகத்தில் வேளாண் விளை பொருள் ஏலங்களுக்கு தடையில்லை என்றாலும், சுகாதார பாதுகாப்பு கருதி வணிகர்கள் இதுவரை ஏலங்களில் கலந்து கொள்ளவில்லை. மஞ்சள் மார்க்கெட் விடுமுறை காரணமாக மஞ்சள் மூட்டைகள் கிடங்குகளில் தேங்கி கிடக்கின்றது. விவசாயிகள் சாகுபடி செலவினங்களை மேற்கொள்ள சிரமங்கள் ஏற்படுவதால் விரைவில் மார்க்கெட் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். எனவே சுகாதார பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றுடன் ஏல மையங்களில் குறைந்த அளவு நபர்களை அனுமதிப்பதின் மூலம் தொற்று பரவலை தடுக்க முடியும். எனவே வருகின்ற 23ம் தேதி முதல் மஞ்சள் ஏலத்தில் கலந்து கொள்வதென வணிகர்கள் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு கூறினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே