ஈரோடு சூன் 24: கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் 50 நாளில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ஸ்ட் அசோசியேசன் நிர்வாகிகள் கூறியதாவது, ஈரோட்டில் தயாரிக்கப்படும் ஜவுளிகள் மொத்த வியாபாரமாக தமிழகம் மற்றும் இந்தியாவில் அனைத்து மாநிலத்துக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறோம். கடந்த 50 நாட்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் கடுமையாக முடங்கிவிட்டது. ஜவுளித் தொழிலை நம்பி உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மடித்தொழிலாளர்கள் சுமை பணியாளர்கள், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் என பல லட்சம் பேர் பாதித்துள்ளனர். தொழில் முடங்கி உள்ள போதிலும், சம்பளம், வாடகை, மின் கட்டணம், குடோன் மற்றும் கடை பாதுகாப்பு, வாட்ச்மேன் சம்பளம், வரி, வட்டி, அபராதம் என அனைத்தையும் செலுத்தி வருகின்றோம். தமிழகத்தில் தளர்வு வழங்கவிட்டாலும், வடமாநிலங்களில் மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், சூரத் என பல இடங்களில் இத்தொழிலுக்கு முழு தளர்வு வழங்கி, உற்பத்தி, ஏற்றுமதி நடக்கிறது. இதனால் ஈரோடு உள்ளிட்ட பகுதிக்கு வர வேண்டிய ஆர்டர்களில் வடமாநிலங்கள், 50 சதவீதத்துக்கு மேல் ஆர்டரை கைப்பற்றி வியாபாரத்தை தக்க வைத்துக்கொண்டனர். உற்பத்தி செய்த ஜவுளி ரகங்கள், விற்பனை செய்ய முடியாமல் குடோன்களில் மட்டும் ரூ.1,000 கோடி மதிப்பிலானவை தேங்கி கிடக்கிறது. எனவே இத்தொழிலுக்கு முழு தளர்வு வழங்க அரசு முன்வர வேண்டும். மேலும் வங்கி கடனுக்கு மூன்று மாத வட்டி தள்ளுபடி, அசலை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் இவ்வாறு கூறினர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே