ஈரோடு சூன் 22: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஐந்து இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால், உழவர் சந்தை செயல்பாடு நிறுத்தப்பட்டு, திறந்த வெளியில் காய்கறி விற்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை வாங்கி வந்து குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். இன்னும் சில விவசாயிகள் தங்கள் பகுதியில் கிடைக்கும் காய்கறிகளை சேகரித்து வந்து விற்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதுடன், இடைத்தரகர் இன்றி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான காய்கறி கிடைக்கிறது. கொரோனா ஊரடங்கில் சில தளர்வு வழங்கப்பட்டு வருவதால் வரும் வாரம் முதல் உழவர் சந்தை திறக்க வாய்ப்புள்ளது. எனவே, உழவர் சந்தையில் உறுப்பினராக உள்ள விவசாயிகள், உழவர் சந்தை திறக்கும் முன்பாக தடுப்பூசி போட்டுக் கொண்டு, அதற்கான சான்றை உழவர் சந்தை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும், என வேளாண் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே