ஈரோடு, மே 30
ஈரோடு மாவட்டத்தில் தேவையான அளவு உரம், விதைகள் இருப்பு உள்ளது, என, வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்தார்.ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பணிகள் மேற்கொள்ளும் அளவுக்கு, தற்போது நீர் இருப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி நெல், மக்காசோளம், உளுந்து, கடலை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு பயன் பெறலாம். குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், முழுமையாக திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து சாகுபடி செய்தால், 40 சதவீத அளவு நீரை சேமிக்கலாம். விளை பொருள் உற்பத்தியையும் இரண்டு மடங்காக்கலாம்.நெல் சாகுபடி செய்துள்ள வயல்களின் வரப்புகளில் பயறு வகை பயிர்களை விதைத்தால், பூச்சி, நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். அதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும். வரம்பில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சியை உண்பதற்காக வரும் பொறி வண்டு, ஊசி தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள், நெல் பயிரை தாக்கக்கூடிய குருத்து பூச்சி, இலை சுருட்டு புழு, புகையான பூச்சிகளை உண்பதால், நெல் பயிருக்கு பாதுகாப்பாகும். மருந்து செலவினம் குறையும்.அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், 57 டன் சான்று பெற்ற நெல் விதைகள் இருப்பு உள்ளது. தவிர சிறுதானியங்கள், பயறு வகை விதைகள், நிலக்கடலை, உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்கப்படுகிறது.சாகுபடிக்கு தேவையான யூரியா – 5,120 டன், டி.ஏ.பி., – 1,260 டன், பொட்டாஷ் – 3,060 டன், காம்ப்ளக்ஸ் – 6,080 டன் ஆகியவை தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால், வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு), 99422 65405 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே