ஈரோடு சூன் 23: ஈரோடு மாவட்டத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டப்பணியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி, ஈரோடு ஆர்.டி.ஓ, பி.பிரேமலதாவிடம், தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு மனு வழங்கினார். அவரது மனுவில் கூறியது: ஈரோடு மாவட்டம் கொடுமுடி, மொடக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் பவர் கிரிட் நிறுவனம் மூலம் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக விளை நிலங்களை, விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்தினர். பயிர் சேத மதிப்பீடும், நிலத்துக்கான இழப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனம் நேரடியாக இழப்பீட்டை விவசாயிகளிடம் வழங்கியது. ஈரோடு மாவட்டத்தில் வருவாய் துறை, இழப்பீடு தொகையை பவர் கிரிட் நிறுவனத்திடம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஒரு தென்னை மரத்துக்கு 31 ஆயிரத்து 280 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் கோவை, திருப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் ஒரு தென்னை மரத்துக்கு 36 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தொகையை பெற்றுத்தர போராட்டம் நடத்தி உள்ளோம். இப்பகுதியில் உள்ள 360 விவசாய பட்டா நிலங்களில் பெரிய தென்னை மரம் 13 ஆயிரத்து 200, சிறிய தென்னை மரம் 2 ஆயிரத்து 600க்கும் இழப்பீடாக 7 கோடி ரூபாய் வரை வழங்க வேண்டி உள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் பவர் கிரிட் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. எனவே, அத்தொகையை பெற்று உரிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே