ஈரோடு சூன் 14: ஈரோடு மாவட்ட கலெக்டராக கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டு உள்ளார்.ஈரோடு மாவட்ட கலெக்டராக சி.கதிரவன் கடந்த, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பணி செய்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் அமைதியான முறையில் நடத்தி முடித்துள்ளார்.கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் முதலில் தலை தூக்கியபோது நோய் தடுப்பு நடவடிக்கையை மிக சிறந்த முறையில் கையாண்டார். சிவப்பு மண்டலமாக இருந்த ஈரோடு, தமிழகத்தில் முதல் முறையாக பச்சை மண்டலமாக மாறியது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவதிலும் தீவிரம் காட்டினார்.இந்நிலையில் கலெக்டர் கதிரவனுக்கு பதிலாக தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றும் கிருஷ்ணன் உன்னி ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அவர் கடந்த 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். 2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திருச்சி மாவட்டத்தில் சப்-–கலெக்டராக (பயிற்சி) பணியாற்றினார்.கடந்த 2014-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சப்–-கலெக்டராக பணியாற்றினார். 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழக நிதித்துறை துணை செயலாளராக பதவி வகித்தார். இதையடுத்து முதல் முறையாக கலெக்டராக தேனி மாவட்டத்தில் பணியில் பொறுப்பேற்றார்.கோபிசெட்டிபாளையத்தில் 3 ஆண்டுகள் சப்–-கலெக்டராக அவர் பணியாற்றிய அனுபவம் உள்ளதால், ஈரோடு மாவட்டத்தை பற்றி ஏற்கனவே அறிந்தவர். கோபியில் சப்-கலெக்டராக பணி செய்தபோது பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்துள்ளார். நள்ளிரவிலும் பல திடீர் சோதனைகளை நடத்தி மணல் கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-வது இடத்தில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் புதிய கலெக்டராக பொறுப்பேற்க உள்ள கிருஷ்ணன் உன்னிக்கு, நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பெரும் சவால் காத்திருக்கிறது. எனவே அவர் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஈரோடு மக்களிடையே எழுந்துள்ளது.
நிருபர்.
ஈரோடு டுடே