ஈரோடு நவ 30:
ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் சர்வ சாதாரணமாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. சில சமயம் உயிரிழப்பும் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களை இயக்குவது தான்.
ஹெல்மெட், வாகன ஓட்டிகளின் உயிர்க்கவசம் என போலீசார் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ஹெல்மெட் அணிந்துதான் இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதை பெரும்பாலான வாகன ஓட்டிகள் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அதைப்போல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
ஆனால் இதையும் எந்த வாகன ஓட்டிகளும் பின்பற்றுவது இல்லை. மாநகர் பகுதியில் ஆங்காங்கே போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 270 வாகன ஓட்டிகளுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ரூ. 27,000 அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.tnpolice.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/