கோபிசெட்டிபாளையம் சூன் 21: கோபி அரசு மருத்துவமனை, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையம், மதுரை வீரன் காலனி, வினோபா காலனி போன்ற பகுதிகளில் உள்ள தனிமை வீடுகளை கலெக்டர் ெஹச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறியது:திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல் மாவட்ட எல்லை பகுதி ஈரோட்டுடன் இணையும் இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் இ–பாஸ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றை, அதே மாவட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்படும். தொடர் சிகிச்சை, கட்டுப்பாட்டு போன்றவற்றால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது தேவையான எண்ணிக்கையில் காலியாக படுக்கைகள் உள்ளன. இதனால் கொரோனா நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படுகிறது. நேற்று வரை மாவட்ட அளவில் 83 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 74 ஆயிரத்து 786 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 369 தனிமைப்பகுதியில் 4 ஆயிரத்து 762 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8.98 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்து 21 ஆயிரத்து 866 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார். பயிற்சி கலெக்டர் ஏகம் ஜெ.சிங், கோபி வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, நகராட்சி ஆணையாளர் ராமசாமி, வட்டாட்சியர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே