ஈரோடு சூன்13-:தமிழகத்தில் ஆவின் பால் விற்பனையகங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் ஆவின் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று இரவு, ஈரோடு வந்தார்.இன்று அதிகாலை 5 மணிக்கு ஈரோட்டில் செயல்படும் ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு பழையபாளையத்தில் செயல்படும் ஆவின் விற்பனையகம், சம்பத் நகர் ஆவின் பால் விற்பனையகம், மாநகராட்சி சுப்பராயலு நகர் பகுதியில் செயல்படும் ஆவின் பால் விற்பனையகம் போன்றவைகளை ஆய்வு செய்தார்.பால் வாங்க வந்த மக்களிடம் பாலின் தரம் குறித்தும், பால் விலை குறைப்பு குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். முன்னதாக சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட கால்நடை தீவன தொழிற்சாலையில் தீவனங்களின் இருப்பு விவரம், தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, சித்தோடு அருகே உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் சேகரிக்கும் விதம், பால் பொருட்கள் தயாரிக்கும் விதத்தையும் பார்வையிட்டார்.பின் அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-சித்தோட்டில் உள்ள ஆவினில், 512 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் 2.23 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 52 தொகுப்பு பால் குளிரகங்கள் இயங்குகிறது. முதல்வர் உத்தரவுபடி அனைத்து வகையான பாலின் விற்பனை விலை ரூ.3 குறைக்கப்பட்டடதால், ஆவின் பால் முகவர்கள் மற்றும் ஆவின் பாலகங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு பால் நுகர்வோர்களுக்கு விலை குறைக்கப்பட்டதற்கான பலன்கள் கிடைப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.3 விலை குறைக்கப்பட்டதால் தினமும் 2,000 லிட்டர் விற்பனை அதிகரித்து தற்போது சராசரியாக 54 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஊரடங்கு தளர்த்தியவுடன் விற்பனை 65,000 லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் பால் பொருட்கள் விற்பனை மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடி என்று இருந்த நிலையில் தற்போது ரூ.1.15 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 273 ஆவின் முகவர்கள் உள்ளனர். மொத்த விற்பனையாளர்கள் 13 பேர் உள்ளனர். 93 ஆவின் முகவர் பாலகங்களும், ஆவின் நேரடியாக நடத்தும் இரண்டு ஹைடெக் பாலகங்களும் உள்ளன.ஈரோடு ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் நெய், கத்தார், சிங்கப்பூர், இலங்கை, துபாய் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 500 பாலகங்கள் திட்டத்தில் ஈரோடு ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 எண்ணிக்கையில் தாளவாடி, சத்தியமங்கலம், கவுந்தபாடி, பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் நவீன பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துக்குட்பட்ட கால்நடை தீவன தொழிற்சாலையில் தினமும் 150 மெட்ரிக் டன் கால்நடை தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கும் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இவை லாபகரமாக இயங்க முழு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை ரூ.6.80 கோடி  வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நகரும் பாலகம் மற்றும் ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் எல்லா இடங்களிலும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் கொள்முதல் செய்து பாதுகாப்பான முறையில் பதப்படுத்தி சுகாதாரமான முறையில் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட பால் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் இதுகுறித்து நிர்வாகத்திடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.

நிருபர்.
ஈரோடு டுடே