ஈரோடு ஜூன் 5: கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு ஒரு புறம் இருந்தாலும், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துகின்றனர். ஆனால் போதுமான அளவு தடுப்பூசி மாவட்டங்களுக்கு வழங்கப்படாததால், பல அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட வருவோர், ஊசி போடப்படாமல் தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாகிறது.ஒவ்வொரு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முதல் 100 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடுகின்றனர். கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற இரு தடுப்பூசியில், முதல் தடுப்பூசியில் பயன்படுத்திய நிறுவன ஊசியே இரண்டாம் டோஸ் போட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 100 நாட்களை கடந்தும் பலரும் இரண்டாவது ஊசி போடாமல் உள்ளனர்.ஈரோடு அகஸ்தியர் வீதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை முதல் 500-க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். தடுப்பூசி போடுவதற்காக டோக்கன் வாங்க வரிசையில் காத்து நின்றனர். இன்று கோவேக்சின் இரண்டாம் டோஸ் மட்டுமே போடப்படும் என்று கூறியதால் ஆத்திரமடைந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து ‘முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டியது தானே’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிகுமார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு சமாதானப்படுத்தினார்.அப்போது அவர் கொரானா தொற்றை கட்டுப்படுத்தவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் நீங்கள் இங்கு சமூக இடைவெளி இன்றி இருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. தடுப்பூசி போடுவது குறித்த விவரம் தெரிவிக்கப்படும். அப்போது வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், என்று கூறினார்.இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே