பெருந்துறை மே 30: தமிழகத்தில் கொரானா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். தற்போது கொரானா பரவல் குறையும் நிலையில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட ஆய்வுக்காக நேற்று முன்தினம் ஈரோட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார்.பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக, 300 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வளாகம் அமைக்கப்பட்டது. நேற்று காலை, இவ்வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, தற்காலிக டாக்டர்கள், நர்ஸ்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முன் களப்பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரானா தடுப்பு பணிகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கினார்.எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, சுப்பராயன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், எஸ்.பி., தங்கதுரை, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.போலீஸ் ஏ.டி.ஜி.பி.,க்கள் டேவிட்சன் ஆசிர்வாதம், தாமரைக்கண்ணன், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., அமல்ராஜ், டி.ஐ.ஜி., நரேந்திரநாயர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை கவனித்தனர்.

நிருபர்.
ஈரோடு டுடே